Thursday, 23 April 2015

ஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்

காயல்பட்டணம் ஜாவியாவில் மவுத்தானவர்களுக்கு 3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா, வருட பாத்திஹா ஓதுவது கூடாது, மய்யித்தை அடக்கச் செல்லும் போது அத்துடன் ரொட்டி, பழம், உப்பு போன்ற பொருட்களை சுமந்து சென்று தருமம் செய்வது (ஒடுக்கு) கொடுப்பது கூடாது என்றும் பத்வா ஒன்றை 5-1-1967 ல் வெளியிட்டனர்.

இந்த பத்வாவை வெளியிட்டவர் மௌலவி சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தின் (ஜாவியா அரபிக் கல்லூரி முதல்வர், காயல்பட்டணம்) அவர்கள். காயல்பட்டணத்தைச் சார்ந்த மௌலவி பாளையம் மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள், மௌலவி ஐதுரூஸ் ஆலிம் பாகவி அவர்கள் போன்றோர்களும் இதை சரிகண்டு கையொப்பமிட்டுள்ளனர்.

 (இதற்கு மாற்றமாக ஒடுக்கு கூடும் என்றும், 3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா கூடும் என்று  பத்வா  மஹ்லறா அரபிக் கல்லூரியிலிருந்து வெளிவந்தது. இதை தொகுத்தவர்: மௌலவி எம்.எஸ்.அப்துல் காதிர் பாகவி (சதர் முதர்ரிஸ், மஹ்லறா, காயல்பட்டணம்)அவர்கள்.)

ஒடுக்கு பத்வா பற்றி விவாதிக்கத் தயார் என்று பகிரங்கமாக மஹ்லறத்துல் காதிரிய்யா சபையினரால் வெளியிடப்பட்ட பிரசுரத்தின் பிரதி:
இந்த ஜாவியா மத்ரஸாவின் பத்வாவினால் காயல்பட்டணத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறந்துவிட்ட மாமாவுக்கு 40 வது கத்தம் ஓதப்படுமானால் உனது சகோதரியை (எனது மனைவியை) தலாக் சொல்லிவிடுவேன் என்று ஒருவர் மிரட்ட, அப்படித் தலாக் சொன்னால் எனது மனைவியான உனது சகோதரியை நானும் தலாக் சொல்லி விடுவேன்' என்று 40-வது கத்தம் என் தந்தைக்கு ஓதுவேன் என்று கூறியவர் பதிலுக்குக் கூற ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக செல்வம் படைத்த அந்த வீட்டில் மௌனமாகவே 40 வது கத்தம் ஓதப்பட்டது!

இந் நிகழ்ச்சி நமதூர் குறுக்குத் தெருவில்தான் நடைபெற்றது. இக்குழப்பத்தை தீர்க்கவும், மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை உலமாக்கள் கலந்து பேசுவதின் மூலம் தீர்த்து ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்திட 'சன்மார்க்க ஊழியர் குழு' அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் N.M.K. இபுறாஹீம்(மவ்லானா), M.K.S.A. தாஹிர், P.S. முஹிய்யத்தீன், S.M.B. மஹ்மூது ஹுஸைன், T.S.A.ஜிப்ரீ, S.K.M.. சதக்கத்துல்லாஹ், K.M.K. காதிர் சுலைமான் ஆகியோர் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.


இவர்கள் ஒடுக்கு பற்றிய பிரச்சனைக்கும், தப்லீக் பற்றிய பிரச்சனைக்கும் உலமாக்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை உலமாக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களிடம் ஒப்பம் பெற்று உலமாக்கள் மாநாட்டைக் கூட்ட இந்த குழு கடந்த 16-11-67 அன்று ஒரு பிரசுரம் வெளியிட்டது. அதன் பின் 17-11-67 ல் மஹ்லறா சென்று ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடமும், S.M.H. முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் அவர்களிடமும், M.S. முஹம்மது அப்துல் காதிர் பாகவி அவர்களிடமும் ஒப்புதல் பெற்று வந்தனர். பின்னர், 18-11-67 அன்று ஜாமியுல் அஸ்ஹர் சென்று அங்கு இருந்த மௌலவி மு.க. செய்யிது இபுறாகீம் ஆலிம் முப்தி, சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தி (சாவண்ணா ஆலிம்), தை. ஷெய்கு அலி ஆலிம் ஆகிய உலமாக்களிடம் சென்று வந்த நோக்கத்தைக் கூறி கையெழுத்துக் கேட்டனர்.

அதற்கு அவர்கள் பலவாறு பேசி பிரச்சனையை திசை திருப்பிட முயன்றபோது (ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆலிமுல் கைபு மற்றும் ஸுஜூது பற்றி தப்பும் தவறுமாக பேசியிருப்பதாகவும் அதற்கும் சேர்த்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் செய்யிது ஆலிம் அவர்கள் சொல்ல), சென்றிருந்தவர்கள் நாங்கள் அவர்களிடம் சென்று பேசி ஒப்புதல் வாங்கி வருகிறோம் என்று சொல்லி சென்றார்கள்.

அதன்பின் 19-11-67 ல் கனம் ஸூபி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து விவரம் கூறி அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும், நான் பேசியது சரிதான். அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதற்குரிய விளக்கத்தை கலீபா அப்பா தைக்காவில் பேசும்போது நான் விளக்கி பேசிவிட்டேன். இருந்தபோதும், அவர்கள் இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளதான் வேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் தயார் என்று சொன்னார்கள்.

இவ்விஷயத்தை பட்டறை செய்யது ஆலிம் அவர்களிடம் சொன்னபோது, சரி நீங்கள் சொன்ன இரு பிரச்சனைகளை மட்டும் பேசி விவாதிக்கலாம், நாளை வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். அதன்பிறகு பலமுறை அவர்களை சந்தித்து கேட்டபோதும் அலைக் கழித்தார்களே தவிர அதற்குரிய பதிலை அவர்களிடமிருந்து பெற முடியவில்லை. அதனால் அந்தக் குழுவினர் ஆலிம்களை தனித்தனியாக சந்தித்து ஒப்புதல் பெற முயற்சியை மேற்கொண்டனர்.

முதலில் மௌலவி ஐதுரூஸ் பாகவி அவர்களையும், புதுப்பள்ளி பேஷ் இமாம் T.A.S. செய்யிது முஹம்மது பாகவி அவர்களையும், மௌலவி மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களையும் , பிறகு முத்துவாப்பா தைக்காவில் வைத்து T.E.S. ஷெய்க் அலி ஆலிம் அவர்களை சந்தித்து இதுபற்றி கூறி அதற்கு ஒப்புதல் கேட்க அவர்கள் அனைவர்களும் சாக்குபோக்கு சொல்லி இறுதிவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்தனர். தாங்கள் வெளியிட்ட  (சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான) பத்வா சரியானது என்ற கொள்கையிலேயே இருந்தனர். இறுதியில் இந்த பிரச்சனை பேசி முடிவெடுக்க முடியாமலேயே முடிந்து விட்டது.

ஆக ஊரில் வஹ்ஹாபியக் கருத்துக்களை முதன்முதலில் பரப்பியவர்கள் மௌலவி மு.க.செய்யிது ஆலிம் முப்தியும், அவரின் அடிவருடியாக செயல்பட்ட சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தி போன்றவர்களும் அவர்களின் சகாக்களும்தான்  என்று தெரிகிறது.

சுன்னத் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கை கொண்ட பிரச்சனையாக இருந்தால் அதைப் பற்றி விவாதித்து அதற்கு விளக்கம் அளிக்க ஷெய்குனா அவர்கள் எக்காலத்திலும் பின்வாங்கியதில்லை. எதற்கும் தயங்கியதில்லை என்பது 'காயல்பட்டினத்தில் உலமாக்கள் மாநாட்டைக் கூட்டிவைக்க சன்மார்க்க ஊழியர் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளக்கம்' என்ற தலைப்பில் 12-01-1968 ல் M.K.S.A. தாஹிர் (அமைப்பாளர், சன்மார்கக் ஊழியர் குழு) என்பவரால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஆணித்தரமாக தெரிவிக்கிறது.

ஜும்ஆவிற்கு முன் தமிழில் பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு

ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்:

தென்னிந்தியா, காயல்பட்டணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர்ஆகும். இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவர்களும் ஷாபியீ மத்ஹபை பின்பற்றியவர்களே! இங்கு சுன்னத்வல் ஜமாஅத் முறைப்படி நமது முன்னோர்களால் கட்டப்பட்ட இரு ஜும்ஆ பள்ளிகள் (குத்பா பெரிய பள்ளி, குத்பா சிறிய பள்ளி) உள்ளன.

வாரம் ஒரு முறை ஒரு பள்ளியில் ஜும்ஆ நடைபெற்று வருகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை இப்பள்ளியில் ஜும்ஆ குத்பா பயான்கள் அரபி மொழியிலேயே நடைபெற்று வந்திருக்கிறது. ஜும்ஆ தினங்களில் மக்கள் முன்கூட்டியே பள்ளிக்குச் சென்று தொழுது ஸூரா கஹ்பு, இன்ன பிற ஸூராக்களையும், ஸலவாத்து ஷரீபுகளை ஓதிக் கொண்டும் எவ்வித இடையூறு இல்லாமல் அமல்கள் செய்து வருவது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் நடந்த 1980-ம் வருடம் மௌலவி நஹ்வி செய்யதஹ்மது ஆலிம் அவர்கள் ஜும்ஆவில் தமிழில் பயான் பண்ணினார்கள். அச் சமயத்தில் அங்கிருந்த ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த பயான் மாக்கத்திற்கு விரோதமானது.

அவ்வாறு பண்ணுவது மார்க்க சட்டப்படி ஹராம் என்று தடுத்தார்கள். அச்சமயத்தில் இது ஊர் மக்கள் மத்தியில் மிகவும் பிரச்சனைக்குரியதாக ஆகி, அதற்குரிய ஆதாரங்களை இரு தரப்பினர்களும் தர வேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கப்பட்டனர். ஷெய்குனா அவர்கள் தரப்பில் ஷெய்குனா அவர்களும், அவர்களது கலீபாக்களான W.M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள், S.M.H. முஹம்மதலி சைபுத்தீன ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள், மௌலவி அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஆலிம் அவர்கள் ஆகியோரும், எதிர் தரப்பில் S.N. சாகிபுத் தம்பி ஆலிம் அவர்கள், M.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் போன்றவர்களும்; கலந்து கொண்டனர்.

கனம். குளம் லெப்பைத் தம்பி ஹாஜி (குத்பா பெரியபள்ளி தலைவர்) அவர்கள் முன்னிலையில் இப்பிரச்சனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் (மார்க்க சட்டப்படி அல்ல) முடிவு எடுக்கப்பட்டு தமிழில் பயான் நடந்து வருகிறது. அச் சமயத்தில் நமது ஷெய்குனா அவர்கள் அங்கு சமர்ப்பித்த பத்வாக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

அச்சமயத்தில் நமது ஷெய்குனா அவர்களை எதிர்த்தவர்கள் தங்களது வாழ்க்கையில் அடைந்த இழிநிலைகளையும், துன்பங்களையும், பட்ட நோய்களையும் இந்நகர மக்கள் நன்கு அறிவார்கள்.
பத்வா ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி ஷெய்குனா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதம்
 
 ஜும்ஆவிற்கு முன் உள் பள்ளியில் அரயபியல்லாத வேறு மொழியில் பயான் பண்ணுவது ஆகாது என்பதற்கு ஷெய்குனா அவர்களால் கொடுக்கப்பட்ட பத்வாக்களை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்கள்.
ஜும்ஆ பயானுக்கு எதிர்ப்பாக கொடுக்கப்பட்ட கடிதத்தின் நகல்.

பெரிய,சிறிய குத்பா பள்ளி மானேஜர் ஜனாப். குளம் லெப்பைத் தம்பி ஹாஜி அவர்களுக்கு கொடுத்த மனு:-

நீங்கள் 4-3-80 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு ஜும்ஆ தினத்தில் உபன்னியாசம் செய்வது பற்றி உலமாக்களிடம் இருந்து வந்திருக்கும் பத்வாக்களை உலமாக்களால் பரீசிலனை செய்ய இருப்பதை பார்க்க வரும்படி அழைத்திருந்த அழைப்பை ஏற்று நாங்கள் வந்தருந்தோம். அங்கு ஆகும் என்று சொன்னவர்களின் பத்வாக்களையும் ஆகாது என்று சொன்னவர்களின் பத்வாக்களையும் வாசித்துக் காட்டியதை நாங்கள் கேட்டோம்.

ஆகாது என்று சொன்னவர்கள் ஜும்ஆ தினத்தில் பாங்கிற்கு முன்னாலும் பின்னாலும் பிரசங்கம் செய்வது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் காலங்களில் நடக்காத பித்அத்தான விஷயம். மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாகாக்கள், தாபியீன்கள், இமாம்கள் செய்து வந்த சுன்னத்தான அமல்களை தடுக்கக் கூடியதாக இருப்பதினால் இது கெட்ட பித்அத், ஹராம். இதை  தடுக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்கள்.

ஆகும் என்று சொன்னவர்கள் இப்பிரசங்கங்கள் செய்வது ஜனங்களுக்கு பிரயோஜனம் அதிகமாக இருப்பதினால் தொழுகைக்கு இடைஞ்சல் இருந்தாலும் ஆகும் என்று சொல்லி இதற்கு ஆதாரமாக இமாம் நவவி அவர்கள் சொல்லியிருக்கக் கூடிய ஒரு வாசகத்திதை அதாவது- ஒரு கூட்டத்தார் பள்ளிவாசலில் குர்ஆனை சப்தமிட்டு ஓதுகின்றார்கள் அவர்கள் ஓதுவதைக் கொண்டு சில ஜனங்கள் பிரயோஜனமடைகின்றார்கள். மற்றவர்கள் இடைஞ்சல் படுகின்றார்கள். இடைஞ்சலை விட பிரயோஜனம் அதிமாக இருக்குமானால் ஓருவது மிக சிறந்தது. அதற்கு மாற்றமாயின் மக்ரூஹாகும் என்ற ஆதாரத்தைக் கொண்டு பயான் செய்வரினால் ஜனங்களுக்கு பிரயோஜனம் அதிகமாக இருப்பதினால் தொழுகின்றவர்களுக்கு இடைஞ்சல் இருந்தாலும் ஆகும் என்றும்,

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வெள்ளிக் கிழைம மிம்பரில் நின்று குத்பா ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ஸஹாபி வந்து, தொழாமல் அமர்ந்து விட்டர். உடனே நாயகமவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழு! அதை சுருக்கமாகத் தொழு! எனக் கூறினார்கள். பிறகு வெள்ளிக் சிழமை இமாம் குத்பா ஓதிக் கொண்டிருக்கும் போது உங்களில் யாரேனும் வந்தால் அவர் இரண்டு ரக்அத்துகள் தொழவும். அவ்விரு ரக்கஅத்துகளையும் சுருக்கமாகத் தொழவும் என்று கூறினார்கள் என்பதை ஆதாரமாக காட்டி பிரசங்கம் செய்வது தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லை  என்றும் சொன்னார்கள்.

அதற்கு ஆகாது என்று சொன்ன உலமாக்கள் நவவி இமாம் சொன்னது இரண்டும் சுன்னத்தான வேளையில் ஒரு வேலைக்கு இன்னொரு வேலை இடைஞ்சலாக இருந்தால் பிரயோஜனம் அதிகமாக இருந்தால் அதை செய்வது விசேஷமானது என்றும் இடைஞ்சல் அதிகமாக இருந்தால் மக்ரூஹ் என்றும் செர்னதை செட்ட பித்அத்தான இந்த பிரசங்கத்தினால் பிரயோஜனம் அதிகமாக இருப்பதினால் ஆகும் என்று ஒழுங்கு செய்வது சரியில்லை. இந்த பிரசங்கமே மார்க்கத்தில் கூடாத வேலை என்றும்,

அஸல் குத்பா ஓதும் சமயத்தில் வந்தவரை தஹிய்யத்துல் மஸ்ஜித் ஓதும்படியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைக் கொண்டு இந்த கெட்ட பித்அத்தான பிரசங்கம் செய்யும் போது தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லை என்று சொல்வது சரியில்லை என்றும் சொன்னார்கள்.

ஆகும் என்று சொல்லும் உலமாக்களுக்கு இதற்கு தகுந்த பதில் சொல்ல முடியவில்லை. மானேஜரான நீங்கள் பொதுஜனங்கள் அதிகமான பேர்கள் பிரசங்கத்தை விரும்புகிறர்கள். அதனால் வரும்வாரம் பிரசங்கத்தை வைப்போம் என்று சொன்னது முற்றிலும் பொருத்தமில்லாத மார்க்கத்திற்கு மாற்றமான தீர்ப்பாகும்.

இப்படி நீங்கள் செய்வீர்களாயின் கெட்ட காரியத்தை செய்யக் கண்டால் கையால் தட்ட வேண்டும் அல்லது வாயால் தட்ட வேண்டும் அல்லது  அல்லது மனதால் வெறுக்க வேண்டும் என்று ஹதீது ஷரீபில் வந்திருப்பதினால் பிரசங்கம் நடந்தால் நாவால் தடுக்கத்தான் செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து தடுக்கத்தான் செய்வோம் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.
ஒப்பங்கள்:
………………..
குறிப்பு: இக் கடிதம் கண்டதும் ஷெய்குனா அவர்கள் தமது முரீது பிள்ளைகளிடம், ஜும்ஆவில் தமிழில் பயான் பண்ணுவது ஹராம்தான். அதை நாம் தடுத்தோம். அவர்கள் கேட்கவில்லை. மார்க்கத்தின்படி பார்க்காமல் முடிவெடுத்து விட்டார்கள். இச்சமயத்தில் ஜும்ஆவில் தமிழில் பயான் நடக்கும்போது நாம் அங்கு செல்லத் தேவையில்லை. அது வீண் குழப்பத்தை உண்டாக்கும் என்று கூறி தடுத்துவிட்டார்கள்.

அல்-ஜாமிவுல் இள்ரார்

காயல்பட்டணத்தில் கடந்த 1953-54-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் L.K. லெப்பைத் தம்பி ஹாஜி அவர்களும், M.K.T. அபூபக்கர் ஹாஜி அவர்களும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ரோஷமாக இரு பிரிவினர்களும் மோதிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு, இறுதியில் M.K.T. அபூபக்கர் ஹாஜி அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஒற்றுமையாக இருந்து வந்த ஊரை மிகச் சிறுபான்மையினராக இருந்து வந்த ஒரு குழுவினர் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரிக்க முற்பட்டனர். அவர்களின் இம் முயற்சிக்கு இத் தேர்தல் ஒரு ஆதரவாகவே அமைந்தது.

அதன் முதல் கட்டமாக சில ஒவ்வாத காரணங்களைக் கூறிக் கொண்டு ஒற்றுமையாக நடந்து வந்த ஜும்ஆவை பிரித்து தனி ஜும்ஆ ஆரம்பிக்க முற்பட்டனர். இது கண்டு மனம் பொறுக்கமாட்டாமல்தான் மா.மு.க. முஹிய்யத்தீன் தம்பி ஆலிம் முப்தி அவர்கள் ஒற்றுமையை காக்க முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. அதனால் அவர்கள் ஒரு பத்வாவை வெளியிட்டனர்.

இந்த பத்வாவின் உண்மையைக் கண்டு அதற்கு எதிர் பத்வா வெளியிட எதிர்தரப்பினர், முன்னர் மேற்படி ஆலிம் அவர்களிடம் கூறிய காரணங்களைக் கூறி வெளியிடாமல், புதிதாக ஒரு காரணத்தைக் (அதாவது கொலை பாதகம் நடைபெறவுள்ளது என்ற காரணத்தைக்) கூறி  இரண்டாவது ஜும்ஆ ஆகும் என்று காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸாவின் முதல்வராக இருந்த சா.ஷாஹுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்களைக் கொண்டு பத்வா வெளியிட்டனர்.

(இந்த சா. ஷாஹுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்கள் தமது இறதி காலம் வரை நமது ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராகவே நடந்து வந்தார் என்பதும், 'பித்னாவாதி'யாகவே செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ஆனால் உண்மையில் எவ்வித கொலை பாதகமும் நடைபெறக் கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தன. அதுவும் காலப்போக்கில் மறைந்துவிட்டன. இரு பகுதியிலும் உள்ளவர்கள் வீடுகளில், பள்ளிகளில், தைக்காக்களில், தர்காக்களில் நடைபெற்ற விஷேசங்கள், துக்க சம்பவங்களுக்கு சென்று வரக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். ஒரு கொலை பாதகமாக சூழ்நிலை ஏற்பட்டிருப்பின் பயத்தால் ஒருவர் பகுதிக்கு மற்றவர்கள்(எதிர்தரப்பினர்கள்) செல்லமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. அச் சூழ்நிலை இல்லாததால் இவர்கள் வெளியிட்ட பத்வா காரணமில்லாமல் போய்விடுகிறது. அதனால் இரண்டாவது ஜும்ஆ என்பது  அவர்கள் கூறிய காரணத்தினாலேயே கூடாததாகிவிடுகிறது.

இந்நிலையில், புதிய ஜும்ஆவிற்கென்று பள்ளி ஒன்றைக் கட்டுவதற்கு S.O. ஹபீபு அவர்கள், S.A.ஹபீபு அவர்கள், P.S. அப்துல் காதிர் நெய்னா அவர்கள் போன்ற பெரியவர்கள் பெரும் முயற்சி எடுத்து புதிதாக 'அல்ஹாமிவுல் அஸ்ஹர்' என்ற பெயரில் பள்ளியை மெயின் ரோட்டில் கட்டி முடித்தனர்.

புதிய ஜும்ஆ பள்ளி பற்றி நம் ஷெய்குனா ஸுபி ஹஜ்ரத் அவர்கள் கூறியது:-

புதிய பள்ளி கட்டி திறக்கப்படும் போது, பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தனர் என்றும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபனரும் முன்னாள் அமீருமான K.A. முஹம்மது அலி ஹாஜியார் அவர்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் தப்லீக் இயக்கத்தின் சேவை பற்றி விரிவாக பேசியதாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்தினர்களால் வெளியிடப்பட்ட நன்றி அறிக்கை (01-10-58) கூறுகிறது. அச் சமயத்தில் அப்பள்ளியைத் தோற்றுவித்த பிரமுகர்கள், கதீப் மற்றும் ஆலிம்கள் உடனிருந்தனர் என்று அவ்வறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது என்பது அப்பள்ளி எந்நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது விளங்க வரும்.

அப்பள்ளி திறப்புவிழா 26-9-58 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரி 1378 ரபீயுல் அவ்வல் பிறை 12) அன்று  திறக்கப்பட்டது. இதற்கு ஹிஜ்ரி வருட கணக்கின்படி ஒரு வருடத்திற்கு முன்பே திறக்கப்பட இருந்தது. நமது ஷெய்குனா அவர்கள், அவ்வாண்டை அப்ஜத் முறைப்படி கணக்கிட்டுப் பார்த்து, இப்பள்ளி குர்ஆனில் கூறப்பட்ட முனாபிக்குகளின் பள்ளியான  'மஸ்ஜிது ளிரார்'  என்ற ஆயத்தோடு ஒத்துவருகிறது. எனவே இப்பள்ளி  'அல்ஜாமிவுல் ளிரார்-'
الجامع الضرار
 வழிகெட்ட பள்ளி ஆகும் என்று பயானில் பகிரங்கமாக எடுத்துரைத்தார்கள்.

(குறிப்பு:- முஸ்லிம்களிடையே பிளவையுண்டாக்கக் கருதி நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்) மஸ்ஜித் ளிறார் என்ற ஒரு புதியபள்ளியைக் கட்டினார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தபூக் சண்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் தாங்கள் கட்டிய பள்ளிக்கு தொழவரவேண்டுமென்று நபியவர்களளை அழைத்தார்கள். சண்டைக்கு சென்று திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நபியவர்கள் சென்று விட்டார்கள். 

சண்டை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சந்தப்பத்திலே 'முஸ்லிம்களுள் பிளவையுண்டாக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டுமென்பதற்காகவே, அந்த மஸ்ஜித் ளிறார் என்ற பள்ளி நயவஞ்சகர்களால் கட்டப்பட்டிருக்கிறது. நன்மையைக் கருதியே அப்பள்ளியை நாங்கள் கட்டினோம் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள். நபியே! நீர் அங்கு செல்ல வேண்டாம். ஆரம்பத்திலே உள்ள பள்ளிதான் நீர் தொழவும், தொழ வைக்கவும் தகுதியானது' என்று நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்தான். பிறகு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி மஸ்ஜிதுல் ளிறார் என்ற அந்த பள்ளி நெருப்புக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவம் திருக்குர்ஆன் ஸூரா அத்தவ்பா, ஆயத்து 107, 108, 110 லும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது) ஷெய்குனா அவர்கள் எடுத்துக் காட்டிய அதன் அப்ஜத் கணக்கு:
ا-1          ل-30              ج-3              ا-1               م-40                     ع-70                     ا-1
ل-30         ا-1           ض—800           ر-200             ا-1                     ر-200          =1378
 
அதன்பின்னால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் அப்பள்ளியின் திறப்புவிழாவை அடுத்தவருடம் தள்ளிபோட்டனர். அடுதத பயானில், 'அவர்கள் நான் சொன்னதை வைத்து திறப்புவிழாவை ஒரு வருடம் தள்ளிப் போட்டுவிட்டனர். நீங்கள் ளிரார் என்பதுடன் ஒரு வருடத்திற்குரிய கணக்கான அலிஃபை சேர்த்து 'அல்ஜாமிவுல் இழ்ரார்'-  الجامع الاضرار வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று வைத்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். ஷெய்குனா அவர்கள் இதை ஒரு பள்ளியாகவே ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

ஷெய்குனா அவர்களின் கூற்றுப்படி தற்போது வரை இப்பள்ளி வஹ்ஹாபிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு மக்களை இன்னும் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவர்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒரு கராமத்தாக உள்ளது.